Sunday, March 11, 2007

போராளி கண்ணம்மாவிடம் ஒரு முறையிடல்..!



சுட்டு வீழ்த்தினரே கண்ணம்மா - எம்
சொந்த தமிழினத்தை - குண்டு
பொட்டுகளோ டெம் பிணங்கள்
வீதியி லிங்கு கண்டாய்
நட்ட நடு நிசியில் னீசர் செய்
நாசங்க ளென் சொல்வோம்
வெட்ட வெளியினிலே யெமை
வெட்டி யெறிந்தனரே-..கண்ணம்மா!



ஓடி ஒளிந்திடவே கண்ணம்மா- இங்
கெம் வூரினிலி டமுமிலை
கோடிகளில் அம்பாரம் (பதுங்கு) குழிகள்
வெட்டி வைத்தோம் (எமக்கு)
கூடி யொருங்கிணைந்து நாம் வாழ
நாதி யேதுமி லையே
கேளித்திருக்குது பாரங்கே ஈனத்தில்
சிங்களக் கும்ப லொன்று....கண்ணம்மா!


ஆத்திரம் கொண்டெழுந்தோம் - கண்ணம்மா
பார்த்திருத்தல் மடமை - தம்
மூத்திரம் பருக்கியே யெமக்கு அவர்
முட்டி யிடர் கொடுத்தார்.
பார்த்திருப்போமோடி இதோ பார்
படைகள் திரண்டு வந்தோம்
சாத்தியெடுப்போமடி யுன்னோடு
சிங்களத்தை சமரில் இன்றோடு...

**********

பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா என்ற பாடல் ராகத்தில் பாடிப் பார்க்க விரும்புவர்கள் முயற்சி செய்யலாம். :)

Saturday, March 10, 2007

கண்ணம்மா ஒரு போராளி..!

என்ன பெண்மையோ நீ - கண்ணம்மா
உன்னுயிர் எமக்களித்தாய்.
மென்மை துறந்திங்கு நீ - தமிழன்னை
மேன்மை துலக்க வந்தாய்.
வன்மை பூண்டனையோ நெஞ்சில்- உனையே
வரமென ஈந்தனையோ?(எமக்கு)
கன்னல் மொழிப் பதுமை - ஒரு
கரும் புலியான(து) புதுமை.

பள்ளி செல வழியிலையே- தமிழ்
பள்ளிகளே சாம்பல் மேடாகையில்
கொள்ளி போட்ட குரங்குகளை - கொடும்
சமரில் கொன்று போட னினைந்தாய்
சுள்ளி முட் புதர்க் காட்டில்- சுடும்
இருட்டு நிழலில் உறைந்தாய்
வெள்ளி முளைத்த வோர் இராவில் - வெந்து
சாம்பரானையோ போர் வேள்வியில்..?

சாவின் பின்னால் பிடி சாம்பராய் - கண்ணம்மா
ஈமைக் கிரியைக்குமிங்கு மிடமிலையா?
காவு கொடுத்தேன் மகளேயுனை- கந்தகக்
குளம்பில் எரி சுவாலையாய்.
தேவ வரமென்றுனையே கண்ணம்மா
சீராட்டி வளர்த்தெடுத்தேன்
சாவு வரவானதோ தேவதையே- உனை
தீயில் கொய்து போடனையோ?

மீள வருவாயோ கண்ணம்மா - போர்
இன்னமும் பாதியிலே
சூழ வருவாயோ யெம் கண் குளிர - புலி
தோழர்கள் கூடியொருங்கே
வாழ வைக்க வேண்டியுனை - நான்
வாரிசாக பெற்றெடுத்தேன்
மீளாத் துயரழித்து எமையே- மாண்டு
போக வைத்தாயே யுன் மரணத்தில்...

கொல்லையிலே நீ வைத்த பதியம் - கண்ணம்மா
முல்லையாய்ச் சொரியுது பார்
இல்லையே நீ யிங்கு நீரூற்ற - யுனை
எண்ணிச் சொரியுது பார் கண்ணீர்
அள்ளி அம்மலரெடுத்து ஆவி துடிக்க - வோர்
ஆரம் தொடுத்து வந்தே னுனக்கு..
எல்லையிலே உன் கல்லறையில் - அதை
இருத்திப் பார்கிறேன் அழகே!

கண்ணம்மா.

என்னைப் பொறுத்தவரை என் பேனாமுனை கூட பெருமைப்பட வேண்டும், தன்னால் என் படைப்புகள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்ததேயென்று....!
இது ஒரு அபரிமிதமான ஆசை தான். அநேகமான ஒவ்வொரு படைப்பாளியிடமும் கிளர்ந்தெழக் கூடிய ஒரு பேராசை தான். தன்னுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் எல்லோரையும் போய் சேர வேண்டும் , எல்லோராலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற ஒரு படைப்பாளியின் ஏக்கம் அறிவு பூர்வமானதா என்ற கேள்வி எப்பவுமே இருக்கிறது....
படைப்பாளி தன்னுடைய கருத்து எல்லோரையும் போய் சேர வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஓரளவு நியாயமானது ஆனால் எல்லொராலும் அங்கீகரிக்கப் பட வேண்டுமென்று எதிபார்ப்பது அதிகபட்டசமான பேராசை..தான்!
ஒவ்வ்வொரு படைப்பாளிகளும் தம்முடைய கருத்துக்களைச் சொல்ல ஒரு கதாபாத்திரத்தைக் கையாளுவது வழமை. அப்படி பிரபல்யமான கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தது பாரதியின் கண்ணம்மா ! கண்ணம்மா என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்து தன்னுடைய காதல் உணர்வை மிக நன்றாகவே வெளிக்காட்டியிருந்தார் பாரதி.
என்றாலும் என் மனதில் ஒரு கேள்வி , அத்தனை புதுமை விரும்பியான பாரதி தன்னுடைய கண்ணம்மாவை குழஎதையாகவும் காதலியாகவும் மட்டுமே படைத்திருந்தார். ஏன் தன்னுடைய சுதந்திரப் போராட்டப் பாடல்களில் சம்மந்தப்படுத்தவில்லை என்று ..?
அந்த பாரதி அன்று செய்யத் தவறியதை நானும் செய்ய விரும்பவில்லை... ஆமாம்... கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்!
கண்ணாம்மாவுக்கு நூற்றாண்டுக்கும் மேலாக தாலாட்டையும் , காதல் உணைவயும் தவிர வேறெதுவும் பாரதி கற்றுத் தரவில்லை. இத்தனைகாலமும் கற்பனைச் சுவையிலும் , உவமை வலையிலும் பின்னிப் பிணைந்திருந்ததிலிருந்து விலத்தி நிஜமான தற்காலத்தின் யதார்த்தமான வாழ்கையின் இன்னொரு பக்கத்தைக் கண்ணம்மாவுக்குக் காட்டியிருக்கிறேன்.



.