Monday, December 10, 2007

மஹா கவி பாரதிக்கு ஓர் அஞ்சலி!




இன்று இந்த நவீன யுகத்தில் மதங்களின் மீதும் கடவுளின் மீதும் மனிதர்களுக்கு உண்மையாகவே நம்பிக்கை இருக்கிறதா அல்லது அவர்கள் கடவுளை நம்புவது போல் பாசாங்கு செய்துகொண்டு ஒவ்வொரு மதத்தின் பெயரையும், அந்தந்த மதங்களின் தெய்வங்களின் பெயர்களையும் வைத்துக் கொண்டு சமூகத்தை துண்டங்களாக்கும் பயங்கர ஆயுதங்களாக பாவிக்கிறார்களா என்று அடிக்கடி தோன்றும்.

பாரதியையும், பாரதியின் கவிதைகளையும் வெறும் இலக்கியமாகப் பார்காமல் சமூகத்தின் விழிப்புணர்சிக்கான திறவுகோல்களாக பார்க்கும் எவருக்கும் மேற்படி சந்தேகம் எழுவதில் எந்தவொரு பிழையுமில்லை என்றே தோன்றுகின்றது.

மகா கவி பாரதியாரின் கவிதைகளில் மூட நம்பிக்கைகளை தூக்கி எறியும் துணிவு இருந்தது. புராணங்களையும், புராணங்களில் சொல்லப்படும் கதை நிகழ்வுகளையும் அவர் எள்ளி நகையாடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

புராணங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையைப் பாருங்கள்.

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்

கடலினைத் தாவும் குரங்கும் - வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்
வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

இன்று வரை பெண்ணியத்தைப் பற்றியும், பெண் விடுதலை என்றும் வெளிப்பகட்டுக்குப் பேசி வருகின்றனரே தவிர உண்மையில் பெண்ணின் விடுதலையையோ அவளுடைய தலையெடுப்பையோ உள்ளுக்குள் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இல்லாத ஆண்கள் மலிந்திருக்கும் யுகம் தான் இது. மனப்பூர்வமாக பெண்ணின் விடுதலையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் ஆண்களுக்கு வரவில்லை என்பது கசப்பான உண்மையே...!

எனினும் பெண்களைப் பூட்டி வைத்த அந்தக் காலத்திலேயே பெண்ணினத்தின் உரிமைகளைப் பற்றியும், பெண்ணினத்துக்கான சமுதாய விடுதலை பற்றியும் தைரியமாக குரல் கொடுத்த ஒரு மனிதன் மகாகவி பாரதி!

பழமை வாதங்களுக்குள்ளும், சம்பிரதாய மூடச் சடங்குகளுக்குள்ளும் பன்னெடுங்காலமாய் முடங்கிக் கிடந்த பெண்ணினத்தை முழுமையாகச் செம்மையாக்கி முற்றிலும் வேறுபட்ட பெண்ணின் இயல்புகளால் புதுமைப் பெண்ணை அன்றே கற்பனை பண்ணி கனாக் கண்டவன் பாரதி. (அநேகமான அவன் கனவுகள் இன்னமும் கனவுகளாக இருப்பது வேறு கதை)
மாகா கவியின் கற்பனையில் புதுமைப் பெண்ணின் அழைகைப் பாருங்கள்.

புதுமைப் பெண்.

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 2

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 4

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 5

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ! 7

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 8

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ! 9

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம். 10

வீரத்தையும், விவேகத்தையும் பாரதியின் கவிதைகள் தந்திருக்கின்றன. மூட நம்பிக்கைகளை களையும் துணிவையும், பழைமவாதத்தை தூக்கி எறியும் தீரத்தையும் அவரின் கவிதைகளில் வார்த்தைகள் காவி வந்தன.


ஆனாலும் தமிழ் சமுதாயம் பாதி கிணறு தாண்டிய பரிதாபநிலையில் அந்தரத்தில் தான் இன்னமும்.....

எத்தனை பாரதிகள் வந்தாலும் -
அவர்
செவ்வன கனவுகள் கண்டாலும்
எம்மவர் விழி திறந்திடார்...-
எத்துணை பாடானாலும்
நனவுக்கு
வழி திறந்திடார்..
நந்திக்கு முந்திய
முட்டுக் கற்களாய்
என்றைக்கும்
எம்மவரே..எதிரிகளாய்...
சிந்திக்க திறனிருந்தும்
சிந்தனையில் தூசு
தானிருக்கும்.,
விந்தை மிகு மனிதரடி..
வீணுக்கு பெருந்திறன்
விழலானதடி!!


என்று செப்பிய காலங்கள்
இன்னமும் நடப்பில்...

ஆயினும்

சாத்திரங்கள் பேசி பூட்டிய
தடை பல உடைத்து
விண்ணேகி வரும்
விந்தைப் பெண்களை நினைத்து,
ஆணுக்கு நிகராய்
அத்தனையும் சாதிக்கும்
பூவுக்கு மட்டும் அல்ல
புயலுக்கும் குலவை.,
கூறவல்ல
காவலுக்கும் கெட்டிகாரிகளைக் கண்டு,
சேவைக்கும் திறன் தூய்மைக்கும்
தம்மை நிரல்படுத்தும்
தாய்களும்
தரம் உயர்ந்து,

கடல் அலைகளை
சில மைல்களால் கடந்த
இன்றையை தேசமொன்றில்
கன்னல் பதுமைகள்
கனல் புதுமைகளாய்
தம் செந்நீரிலேயே
புது வரலாறு
எழுதும்
நிம்மதியில் ,
அவன் உறங்கட்டும்....
அவன் கனவுகள்
இனிமையாக கலையாமல்
பாங்காக அவன்
துயிலட்டும்..

புது பாதைக்கு
வாகாய் வழி வகுத்த
மாகவிக்கு பாவாலே
அஞ்சலி..
பாட்டிலேயோர் அஞ்சலி!!

4 comments:

கார்க்கிபவா said...

அருமை. இத்ற்கு முதல் பின்னூட்டம் போட்ட பெருமை எனக்கு கிடைத்தது

தமிழ் அஞ்சல் said...

பாரதிக்கு முதல் வணக்கம்

அவர் பெருமை போற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்

தமிழ் அஞ்சல் said...

பாரதிக்கு முதல் வணக்கம்

அவர் பெருமை போற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்

virutcham said...

//மனப்பூர்வமாக பெண்ணின் விடுதலையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் ஆண்களுக்கு வரவில்லை என்பது கசப்பான உண்மையே...! //

ஆண்களுக்கு மட்டுமா? பெண்களுக்கும் தான்